2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் அமைக்க சென்னை அருகே 5 இடங்கள் தேர்வு

10

சென்னை : சென்னை அருகே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஐந்து இடங்களை அடையாளம் கண்டு, ஆய்வு நிறுவனங்கள், 'டிட்கோ'வுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளன.



அவற்றை, முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து, ஒரு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேலைக்காக மக்கள் வருவதால், அந்நகரங்களின் எல்லை பகுதிகள் விரிவடைகின்றன.



அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், சுகாதாரம், பஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசுக்கு செலவு அதிகரிக்கிறது. இதனால், பெருநகரங்களின் விரிவாக்கம் நடப்பதை காட்டிலும், மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



அதன்படி, முதல் கட்டமாக, 'சென்னை அருகில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்கப்படும்' என, நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நகரில் குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெறும்.


சர்வதேச நகரை உருவாக்க, இடத்தை தேர்வு செய்யும் பணியை, சி.பி.ஆர்.இ., மற்றும் ஜே.எல்.எல்., என்ற நிறுவனங்கள் வாயிலாக, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது.



அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில், ஐந்து இடங்களை அடையாளம் கண்டு, ஒப்பந்த நிறுவனங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.



இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:




இந்தியாவில், அதிக நகரமயமாக்கல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வருவதில், தமிழகம் முன்னணியில் உள்ளது. எனவே, மக்கள் இடம் பெயர்வதை தடுக்கவும், அனைத்து வசதிகளும், ஒரே இடத்தில் கிடைக்கவும், புதிய நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

சென்னை அருகில் அடையாளம் காணப்பட்டுள்ள, ஐந்து இடங்கள் குறித்த ஆய்வு அறிக்கை, விரைவில் முதல் வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படும். அவரின் ஆலோசனைப்படி, விரைவில் ஒரு இடம் தேர்வு செய்யப்படும்.

அங்கு சர்வதேச நகரை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கலாமா அல்லது வேறு ஏதேனும் முறையில் அமைக்கலாமா என்பது, முதல்வரின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.. இவ்வாறு அவர் கூறினார்.


@block_B@ என்னென்ன வசதி இருக்கும்? சர்வதேச நகரில், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் பிரிவினருக்கு ஏற்ற வகையில், வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, பணியிட வசதி, வணிக வளாகம், வங்கிகள், பூங்கா, பொழுதுபோக்கு வசதி உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். பசுமை மின்சாரம், குறைந்த மின்சாரத்தில் அதிக திறனில் செயல்படும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இப்புதிய நகரத்துடன், சென்னையை இணைக்கும் வகையில், சாலை, பஸ் வசதி, மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்றவையும் ஏற்படுத்தப்படும்.block_B

Advertisement