அடுத்த 5 ஆண்டுகளில் 17,000 ரயில்பெட்டிகள் உற்பத்தி இலக்கு; அஷ்வினி வைஷ்ணவ்

1

புதுடில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 17,000 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில் இன்று அவர் பேசியதாவது; ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வசதிக்காக பொது வகுப்பு மற்றும் ஏசி அல்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்த பயன்பாட்டில் உள்ள 82 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 70 சதவீதம் பொது வகுப்பு மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளாகும். ரயில்களில் உள்ள 69 லட்சம் இருக்கைகளில் 78 சதவீதம் இந்த இரு பிரிவுகளில் உள்ளன.


அடுத்த 5 ஆண்டுகளில் 17,000 பொது வகுப்பு மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளை உருவாக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2019-20ல் நாளொன்றுக்கு 13,169 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 2024-25ல் 13,940 ரயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


டில்லி-மும்பை மற்றும் டில்லி-ஹவுரா வழித்தடங்களில் (தோராயமாக 3,000 கி.மீ.,) விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத இறுதி நிலவரப்படி, இந்த வழித்தடங்களில் சுமார் 2,200 கி.மீ., தொலைவு வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. 144 வந்தே பாரத் ரயில்சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.


அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024-25 ம் ஆண்டில் பொது வகுப்பு அல்லது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தோரின் எண்ணிக்கை 651 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டு 609 கோடியாக இருந்தது, எனக் கூறினார்.

Advertisement