இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பு; ஆக., 1 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவிப்பு

37

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


@1brகடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், இந்த பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். குறிப்பாக, இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கப்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதை வெளிப்படை எதிர்த்திருந்தார்.

இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுக்கள் நடந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா நமது நல்ல நண்பன். கடந்த சில ஆண்டுகளாக நாம் அவர்களுடன் சிறு வர்த்தகம் செய்து வருகிறோம். உலகளவிலேயே இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது.


அதேபோல, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் ராணுவ பொருட்களை இந்தியா வாங்கி வருகிறது. மேலும், ரஷ்யா, சீனாவிடம் இருந்து எரிபொருட்களையும் கொள்முதல் செய்து வருகிறது. உக்ரைனில் பொதுமக்களை ரஷ்யா கொன்று குவிப்பதை தடுக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பும் வேளையில், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது. இது எல்லாம் நல்லதுக்கு அல்ல.

இந்தியாவுக்கு ஆக., 1 முதல் 25 சதவீத கூடுதல் அபராத வரி விதிக்கப்படுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement