கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
சென்னை மாநகராட்சியின் 1260 இடங்களில் உள்ள10000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.620 கோடி மற்றும் ராயபுரம், திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயம் ஆக்குவதற்கு ரூ.430 கோடி என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகி உள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.
குறிப்பாக, ஜனவரி 2022ல் ரூ.3.18 ஆக இருந்த ஒரு பொதுக் கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022ல் ரு.363.9 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால்,தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரை எல்லாம் கறை படிந்து துர்நாற்றம் வீசுகின்றன. இது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஏற்கனவே கடந்த 2023ல் மகளிர் நலனுக்காக ரூ.4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட she toilets என்ற நடமாடும் மகளிர் கழிப்பறைகள் ஒரு வருடத்திற்குள் காணாமல் போய்விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிப்பறைகளும், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது பெரும் சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? இப்படி அலங்கோலமாக காட்சியளிக்கும் கழிப்பறைகளை பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்குச் செல்கிறது, எங்கே செல்கிறது?
ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன திமுக, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிப்பறையிலும், கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது, அருவருக்கத்தக்கது. இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.




