மத்திய பிரதேசத்தில் சோகம்; தாறுமாறாக வந்த லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர் பலி; 6 பேர் படுகாயம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கங்கை நதியில் இருந்து புனித நீரை சொந்த ஊருக்கு எடுத்து வருவது கன்வார் யாத்திரை எனப்படுகிறது. இந்த புனித நீரை வைத்து, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வதை வட மாநில மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உஜ்ஜைன் சென்று கொண்டிருந்த கன்வார் யாத்ரீகர்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில், கன்வார் யாத்ரீகர் ஆதர்ஷ் ரத்தோர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் ஆறு கன்வார் யாத்ரீகர்கள் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், ஜார்க்கண்டில் தனியார் பஸ் டிரைவர் துாங்கியதால், எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில், டிரைவர் மற்றும் பஸ்சில் பயணித்த ஐந்து கன்வார் யாத்ரீகர்கள் பலியாகினர். தற்போது மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்து சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.