ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்

திருச்சி: ''கள் மது என்றால் மது ஆகிவிடுமா, இன்னும் உங்கள் ஆட்சியும் 500 ஆண்டுகள் இருந்திட போகிறதா? சரியாக இன்னும் 6 மாதம் தான்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த 'கள்' விடுதலை மாநாட்டில், சீமான் பேசியதாவது: மாடு புல்லையும், தண்ணீரையும் குடித்து விட்டு பால் கறக்கிறது. இது பசும்பால். இது தண்ணீரை குடித்து விட்டு பால் கறக்கிறது, இது பனம்பால். கள் என்று சொல்கிறவர்கள் கொஞ்சம் தள்ளி நில். நான் சொல்கிறேன் அது பனம்பால், தென்னம் பால், மூலிகை சாறு. அதுதான் இனி வரும் காலங்களில் அதற்கு பெயர்.
சாராய ஆலைகள்
பனை அதை நினை.பெற்ற தாய் என நினைத்து கட்டி அணை, அதுவே தாய் நிலத்தின் வளத்தை காக்க துணை. பனைமரம் அடர்ந்து இருந்த காட்டில், வளத்திற்கு ஒரு பஞ்சமும் இல்லை. கள் மது என்று போராடுகிறவர்கள் யார்? சாராய ஆலைகள் முதலாளிகளின் கை கூலிகள். கள் விற்பனையை அறிவித்தால் டாஸ்மாக் விற்பனை படுத்துக்கிடும்.
குலத்தொழில்
நாங்கள் முன் வைக்கும் அரசியல் காலத்தின் அரசியல், நிலத்தின் அரசியல். மக்களுக்கு தேவையான அரசியல். நாங்கள் பிரச்னையில் பிறந்த பிள்ளைகள். ஆடு, மாடு மேய்ப்பது குலத்தொழில், வேளாண்மை செய்வது குலத்தொழில். நான் இந்த இடத்திற்கு வந்து எல்லாரையும் பயம் காட்டி கொண்டு இருப்பேன் நினைத்தீர்களா?
எல்லா கல்லூரிக்கும் என்னை கூப்பிட கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். என்னை பார்த்து நடுங்குகிறார்கள். என்னை எதிர்த்து போராடும் அளவுக்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டன, உள்ளே பயந்து நடுங்குவார்கள், வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
6 மாதம் தான்
கள் என்பது உணவுப்பொருள்; பல நோய்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது.
கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசுக்கு வருமானம் கிடைக்கும். கள் மது என்றால் மது ஆகிவிடுமா, இன்னும் உங்கள் ஆட்சியும் 500 ஆண்டுகள் இருந்திட போகிறதா? சரியாக இன்னும் 6 மாதம் தான். இவ்வாறு சீமான் பேசினார்.









