ஆன்லைன் மோசடி வழக்கு: மும்பை ஆசாமிகள் கைது புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி

புதுச்சேரி: இணைய வழி வேலை என கூறி, 4 லட்சத்து 68 ஆயிரத்து 127 ரூபாய் மோசடி செய்த மும்பையை சேர்ந்த இருவரை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் பகுதி யை சேர்ந்த சேர்ந்தவர் மகேஷ்குமார், 48. இவருக்கு, ஒரு தனியார் நிறுவனத்தில், ஆன்லைன் மூலம் பகுதி நேர டைப்பிங் வேலை இருக்கிறது என, மெசேஜ் வந்தது. அதனை நம்பிய மகேஷ்குமார், அந்த நிறுவனத்திற்கு ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய ஒப்புக்கொண் டார். அந்த நிறுவனம், மகேஷ்குமாருக்கு 11 மாத கால வேலை செய்ய போலியான ஒப்பந்தம் மற்றும் வேலை செய்வதற்கான லிங்க்கை அனுப்பியது.
மகேஷ்குமார், அந்த லிங்கின் மூலம் உள் நுழைந்து அவர்கள் கொடுத்த டாஸ்கை செய்து முடித்தார். அதன் பிறகு, மகேஷ்குமாரை தொடர்பு கொண்ட அந்நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காததால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி மிரட்டி, 4 லட்சத்து 68 ஆயிரத்து 127 ரூபாயை அபகரித்தனர். இணைய வழி மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேஷ்குமார், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், உதவி சப் இன்ஸ்பெக்டர் சுதாகர், ஏட்டு அருண்குமார், காவலர்கள் சதீஷ், வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
அதில், மகேஷ்குமாரை மிரட்டி பணம் பறித்தது மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த சிவப்பா, 48, போபடோ, 48, ஆகியோர் என்பதும், கடந்த 5 நாட்களில், அவர்களது வங்கி கணக்கிற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதும், மேலும், 20க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை உபயோகப்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிவப்பா, போபடோ ஆகியோரை, சைபர் கிரைம் போலீசார், கைது செய்து, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், நிறுவனத்தை நடத்தி வரும் மூன்று நபர்கள், துபாயில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சைபர் கிரைம் பிரிவு சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில் 'நாளுக்கு நாள் புதிய புதிய முறையில் இணைய வழி மோசடிகள் பெருகிக்கொண்டே செல்கிறது. இணைய வழியை நம்பி வரும் வேலை வாய்ப்பு, டிஜிட்டல் அரஸ்ட், வீட்டில் இருந்தே வேலை, பங்குச் சந்தையில் முதலீடு, குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம் போன்ற எதையுமே நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில், இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0 413-2276144/ 9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in. இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in ல் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
மேலும்
-
இந்திய அணி திணறல் ஆட்டம் * மழையால் போட்டி பாதிப்பு
-
ஹனிமூன் சென்ற டாக்டர் தம்பதி மரணம் சுற்றுலா நிறுவனம் ரூ.1.60 கோடி தர உத்தரவு
-
கூட்டுறவு வங்கிகளில் இணையவழி சேவை
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
கருணை வேலை தராதது ஏன்? போக்குவரத்து துறைக்கு கேள்வி
-
ரயில் விபத்து சதிச்செயலே அக்., 11ல் திருவள்ளூரில் நடந்தது