ரயில் விபத்து சதிச்செயலே அக்., 11ல் திருவள்ளூரில் நடந்தது

சென்னை:'திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நடந்த, பாக்மதி விரைவு ரயில் விபத்துக்கு, சதிச்செயலே காரணம்' என, உயர்மட்ட குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, 2024 அக்., 11ல், மேற்கு வங்கம் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற, 'பாக்மதி' பயணியர் விரைவு ரயில், கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்கு, இரவு 10:30 மணிக்கு சென்ற போது, தண்டவாளத்தில் தடம் மாறி வேறு பாதையில் சென்று, அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இதில் விரைவு ரயிலின், 13 பெட்டிகள் தடம் புரண்டன. அதில், ஒரு பெட்டி முழுமையாக தீப்பற்றி எரிந்தது. விபத்தில், 19 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து விசாரிக்க, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு, முழுமையாக விசாரணை நடத்தி, ரயில்வே வாரியத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், 'விரைவு ரயில் வந்த பிரதான பாதையின், 'சிக்னல்' உள்ளிட்ட அமைப்பு தானாக செயலிழந்து மாற்றம் அடையவில்லை. சமூக விரோதிகளால் தண்டவாள பாதை வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது.

'இந்த சதிச்செயலால் விபத்து நடந்துள்ளது. அதன்படி, சமூக விரோதி களால் பாதை மாற்றப்பட்டதால், விரைவு ரயில் மாற்றுப் பாதையில் சென்று, சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

'விபத்தின் போது பெரிய அளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டதற்கு, ரயில் ஓட்டுநர் சுப்பிரமணி சிறப்பாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தை குறைத்ததே முக்கிய காரணம்' என்றும், கூறப்பட்டு உள்ளது.

அவரை பாராட்டி விருது வழங்கவும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. மேலும், நாசவேலையால் நிகழ்ந்த விபத்து என்பதால், தேசிய புலனாய்வு முகமை முழுமையாக விசாரிக்கவும், ரயில்வே வாரியத்திற்கு குழு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement