ஆங்கிலேயர்கள் அடைக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டணா சிறை

நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள், மக்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினர். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர மக்களை இணைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் கடுமையாக போராடினர்.

தங்களுக்கு எதிராக போராடியவர்களை சிறையில் அடைத்து ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்தினர்.

இந்த போரின் போது கைதாகும் ஆங்கிலேயர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அத்தகைய சிறை கர்நாடகாவில் உள்ளது. அதன் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ளது கர்னல் பெய்லி நிலவறை. இந்த இடம் மைசூரு சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான, திப்பு சுல்தான் காலத்தில் சிறையாக இருந்தது.

ஆங்கிலோ - மைசூரு போரின்போது, சிறை பிடிக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளை திப்பு சுல்தான் இங்கு தான் சிறை வைத்தார்.

பெய்லி என்று அழைக்கப்படும், கர்னல் பெய்லி இரண்டாம் ஆங்கிலோ - மைசூரு போரில் சிறைபிடிக்கப்பட்டு, குகை பகுதியில் உள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார். அந்த அறையில் குறைவான வெளிச்சம் மட்டுமே இருக்கும்.

பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அவர், சிறையிலேயே உயிரிழந்தார். இதனால் அந்த சிறைக்கு கர்னல் பெய்லி நிலவறை என்ற பெயர் வந்தது.

செங்கல், சுண்ணாம்பு வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த சிறை, கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தது. மிகவும் வலுவாக இருந்த கட்டடம் 1799ம் ஆண்டு நடந்த போரில், பிரிட்டிஷ் படைகள் வீசிய சக்தி வாய்ந்த குண்டுகளால் வலுவிழந்தது. 1812 காலகட்டத்தில் கர்னல் பெய்லியின் மருமகன் கர்னல் ஜான் பெய்லி, லக்னோ நீதிமன்ற ரெசிடென்டாக இருந்தபோது, சிறையில் கர்னல் பெய்லி பெயரில் கல்வெட்டு திறக்கப்பட்டது.

தற்போது சிறையும், கல்வெட்டும் அப்படியே உள்ளது. பழங்கால கட்டடம் என்பதால் சுற்றுலா பயணியர் பார்வைக்காக திறக்கப்பட்டு உள்ளது.

தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. பெங்களூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணா 127 கி.மீ., துாரத்தில் உள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில்

இருந்து மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மைசூரு செல்லும் ரயிலில் சென்று ஸ்ரீரங்கப்பட்டணாவில் இறங்கியும் அங்கு செல்லலாம்.




- நமது நிருபர் -

Advertisement