மின்விளக்குகள் இல்லாத கொசஸ்தலை பாலம் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அச்சம்

பொன்னேரி:கொசஸ்தலை ஆற்றில் புதியதாக அமைக்கப்பட்ட பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மடியூர் -- நாலுார் கம்மார்பாளையம் கிராமங்கள் இடையே, கொசஸ்தலை ஆற்றில் கடந்த 2022ல், நபார்டு நிதியுதவியின் கீழ், 18.50 கோடி ரூபாயில் உயர்மட்ட மேம் பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் முடிந்தது.
இந்த பாலமானது 210 மீ., நீளம், 12 மீ., அகலத்தில் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன் பாட்டில் உள்ளது.
தற்போது இந்த பாலத்தின் வழியாக மடியூர், வழுதிகைமேடு, பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், அட்டப்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந் தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்கின்றனர். அதேசமயம் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பதால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இரவு நேரங்களில் பாலம் இருண்டுகிடப்பதால், கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
பாலம் அமைந்ததால், நீண்டதுாரம் சுற்றிக்கொண்டு பயணிக்கும் சிரமம் குறைந்துள்ளது.
அதேசமயம் பாலத்திற்காக, 18.50 கோடி ரூபாய் செலவிட்ட ஒன்றிய நிர்வாகம், மேலும் சிறிது நிதியை ஒதுக்கி மின் விளக்குகள் அமைத்திருக்கலாம்.
மின்விளக்குகள் இல்லாமல் சிரமம் ஏற்படுவதுடன், வழிப்பறி, 'ஈவ் டீசிங்' உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.