தீமிதி திருவிழாவில் சுவாமி ஊர்வலத்திற்கு தடை

திருத்தணி:இன்று நடக்கவுள்ள தீமிதி திருவிழாவில், சுவாமி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் ஊராட்சி ராமாபுரத்தில், 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமம் அருகே, 2017ம் ஆண்டு வருவாய் துறையினர் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில், 10 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமாபுரம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில் ஆடி மாதம் தீமிதி திருவிழா மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. இன்று தீமிதி விழா நடக்கவுள்ளது.

இந்நிலையில் நேற்று, 10 குடும்பத்தினர், தீமிதி விழாவின் போது சுவாமி எங்கள் பகுதிக்கு ஊர்வலம் வரவேண்டும் என, விழா குழுவினரிடம் கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் நடந்தது.

தகவல் அறிந்ததும், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தினர். இதில், சுமூக உடன்பாடு ஏற்படாததால், கோட்டாட்சியர் கனிமொழி, இன்று நடைபெறும் திருவிழாவில் சுவாமி ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Advertisement