2026 தினசரி காலண்டர் 'சிலிப்'பில் இரண்டு தேதிகள் செலவும் குறையும், விலையும் குறைவு

மதுரை : அடுத்தாண்டிற்குரிய தினசரி காலண்டரில் புதுமுயற்சியாக ஒரே தாளில் இரண்டு தேதிகளை அச்சிட்டு மதுரை, சேலம், ஈரோடு வியாபாரிகள் புதுமையை புகுத்தியுள்ளனர். சிவகாசியில் இந்த புதுவகை 'சிலிப்' அச்சிடப்பட்டு வருகிறது.

மாதக்காலண்டரில் ஒரே தாளில் கடந்த மாதம், அடுத்த மாதம் என அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் தினசரி காலண்டரில் அன்றைய தேதி மட்டுமே இருக்கும். அதில் ராசி, நேரத்தின் பலன்கள் போன்றவை இடம்பெற்று வருகிறது.

காலம் காலமாக இம்முறையில் தினசரி காலண்டர் அச்சிடப்பட்டு வருகிறது. சில கம்பெனிகள் தினசரி காலண்டரில் சனி, ஞாயிறு அல்லது பண்டிகை நாட்களை ஒரே தாளில் அச்சிட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை ரமேஷ், சேலம் பிரவீன்குமார், ஈரோடு வர்ஷன் ஆகியோர் இணைந்து புதுமுயற்சியாக, தினசரி காலண்டரில் ஒரே தாளில் அடுத்தடுத்து தேதிகளை அச்சிட்டு கவனத்தை ஈர்ததுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இதன்மூலம் காலண்டர் தயாரிக்கும் செலவு 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறையும். 'டேக் சிலிப்' எண்ணிக்கையும் குறையும்.பொதுவாக 'சிலிப்' அளவு 4 இன்ச் உயரம், ஐந்தேகால் இன்ச் அகலம் இருக்கும். அடுத்த அளவாக ஐந்தரை இன்ச் நீளம், 8 இன்ச் அகலம் இருக்கும். இந்த அளவுகளிலேயே ஒரே 'சிலிப்'பில் இரு தேதிகளை அச்சிட்டுள்ளோம்.

நேற்றைக்குரிய தேதியை மட்டும் கிழிக்கும் வகையில் 'பஞ்ச்' செய்துள்ளோம். உதாரணமாக ஒரே 'சிலிப்'பில் 2,3 தேதி இருக்கிறது என்றால், 2க்குரிய தேதி 'சிலிப்'பை மட்டும் கிழிக்க முடியும். அந்த இடத்தில் அடுத்ததாக 4ம் தேதிக்கான 'சிலிப்' இருக்கும். இதனால் தேதி குழப்பம் ஏற்படாது. தற்போது இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சிவகாசியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'சிலிப்'களை அச்சடிக்க ஆர்டர் கொடுத்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

Advertisement