போலீசாரின் பணி சவாலானது: ஜவகல் ஸ்ரீநாத் புகழாரம்

மைசூரு, : ''போலீசாரின் பணி எவ்வளவு சவாலானது என்பது எனக்கு தெரியும்,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

மைசூரில் உள்ள கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று, 'வீட்டுக்கு வீடு போலீஸ்' திட்டத்தை, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

நான் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலராக இருந்தபோது, போலீசாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பணி எவ்வளவு சவாலானது என்பது எனக்கு தெரியும். அவர்களின் நிலையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தங்கள் பணி மூலம் பொது மக்களின் நம்பிக்கையை பெறுவது சுலபமல்ல. அதுவே இருவரும் புரிந் து கொண்டால் இது சாத்தியமாகும். தங்களை சுற்றி உள்ளவர்களின் வீடுகளை பாதுகாக்கும் பொறுப்பை போலீசார் ஏற்கும்போது, பொது மக்களின் பாதுகாவலர்களாக தெரிவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் பேசியதாவது:

உங்கள் உரிமைகளை நாங்கள் பாதுகாக்கிறோம். இதற்கு உங்களின் ஆதரவு தேவை. பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், எங்கள் பணி மிகவும் கடினமாகிவிடும். போலீசார் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று குறைகளை கேட்டு, சட்டப்படி தீர்வு காண்பர்.

ஒவ்வொரு 'பீட்' ஏட்டுகளுக்கும், இப்போது 40 முதல் 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்ப்பர். அப்பகுதியில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement