கவின் ஆணவப்படுகொலையில் முதல்வர் மவுனம் சாதிப்பது ஏன் ; 'எவிடென்ஸ்' கதிர் கேள்வி

மதுரை : அஜித்குமார் கொலையில் உடனே நிவாரணம் அறிவித்து அலைபேசியில் ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி ஐ.டி., ஊழியர் கவின் ஆணவக் கொலையில் மவுனம் சாதிப்பது ஏன்,' என கேள்வியெழுப்பியுள்ளார் 'எவிடென்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.

அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் 7 ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்துள்ளது.

ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று 2018 ல் சக்திவாகினி வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் சட்டம் இயற்றப்படவில்லை.

கவினும், அந்த பெண்ணும் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

கவின் முன்னணி ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்தும், அவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் இந்த ஆணவப்படுகொலை நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றுவோம் என்றார், முதல்வர் ஸ்டாலின்.

ஆனால் இப்போது நடந்த படுகொலைக்கு வெளிப்படையாக கண்டிக்காமல், மவுனமாய் இருக்கிறார். கலெக்டர், அமைச்சர்கள் கூட நேரில் ஆறுதல் சொல்ல செல்லவில்லை. பிரேத பரிசோதனை கூட பெற்றோருக்கு தெரியாமல் செய்யப்பட்டுள்ளது. அந்தப்பெண் நான் காதலித்தது உண்மை என்று சொல்லியிருக்க வேண்டும். பெண்ணின் அப்பா எஸ்.ஐ., சரவணன் பலமுறை அலைபேசியில் கவினை மிரட்டியுள்ளார்.

இருவருக்கும் நடந்த உரையாடல்கள் கவினின் அலைபேசியில் உள்ளது. அலைபேசியை கைப்பற்றி தரவுகளை போலீசார் அழிக்க வாய்ப்புள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் போலீஸ் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சக்தி வாகினி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய 20 வழிகாட்டு நெறிமுறைகளை உடனே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.

Advertisement