பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்

46


சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

2026ம் ஆண்டு நடக்கவிருக்கம் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது; ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் எதிர்காலம் குறித்தும், மக்களின் பிரச்னைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு, 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று முதல் அந்தக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டது.

தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் அதன் தலைவர் ஓபிஎஸ் விரைவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எந்தக் கட்சியினருடன் தற்போதைய சூழலுக்கு கூட்டணி கிடையாது. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் நாடறிந்தது தான். எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2026 தேர்தலும் வரும். அதில், சரியான கூட்டணி, மக்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் கூட்டணி எதிர்காலத்தில் அமையும், எனக் கூறினார்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதிலளிக்கையில், "சென்னையில் இருக்கும் போது நடைபயிற்சி செய்வது வழக்கம். நடைபயிற்சியின் போது அவர் அங்கிருந்தார். வணக்கம் சொல்லி விட்டு சென்றோம்," என்றார்.

சந்திக்காத வருத்தம்


@block_B@சமீபத்தில் பிரதமர் மோடி, தமிழகம் வந்திருந்தார். அவர் திருச்சி வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவரை சந்தித்துப் பேச நேரம் வழங்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் நேரம் கேட்டபோது, அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வருத்தம் காரணமாகவும், ஏற்கனவே நடந்த சில நிகழ்வுகளாலும் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.block_B

Advertisement