தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி; பொறுப்பேற்ற 36 மணிநேரத்தில் பணியிட மாற்றம்

16

லக்னோ: ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூரின் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணி நேரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட துணை கலெக்டராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி கடந்த திங்கட்கிழமை (ஜூலை 28) பொறுப்பேற்றார். துணை கலெக்டராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, தனது அலுவலக கழிப்பறை அசுத்தமாக இருப்பதற்கு பொறுப்பேற்று, வக்கீல்களின் முன்பு தோப்புக்கரணம் போட்டு, தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணிநேரத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் லக்னோவில் உள்ள வருவாய் ஆணையகத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரிங்கு சிங் ராஹி பணியிட மாறுதலுக்கு தோப்புக்கரணம் போட்ட செயல் தான் காரணமா? என்று உயர் அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் அதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

இருப்பினும், ரிங்கு சிங்கின் பணியிட மாறுதலுக்கு அவரது நேர்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அது, அவரது கடந்த கால பணி விபரங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.

பின்னணி




கடந்த 2008ம் ஆண்டு முஷாபர்நகர் மாவட்ட நலத்துறை அதிகாரியாக பணியாற்றி போது, ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்தினார். இதையடுத்து, 2009ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது, ரிங்கு சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இவர், தாடை எலும்புகள் பாதிக்கப்பட்டதுடன், வலது கண் பார்வையையும் இழந்தார்.

கடந்த 2012ல் பதவி உயர்வு மறுக்கப்பட்டதால் லக்னோவில் தர்ணாவில் ஈடுபட்டார். மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார்.

2012-21 வரையில் பொது சிவில் துறையில் பணியாற்றினார். மதுராவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.

2022ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் பெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார். 2025ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ஷாஜகான்பூரின் போவாயன் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டாக பொறுப்பேற்றார். அப்போது, அறிவிக்கப்படாத நில ஏல முறைகளை ரத்து செய்தல், தாலுகா அளவிலான வரவு, செலவு விபரங்களை டிஜிட்டல் மயமாக்கல், வாட்ஸ்அப்பில் புகார் மனு அளித்தல் உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார்.

இந்த நிலையில், ஜூன் 30ம் தேதி லக்னோவில் உள்ள வருவாய் ஆணையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பணியிட மாறுதல் குறித்து ரிங்கு சிங் ராஹி கூறுகையில், "என்னுடைய கண், முகம் மற்றும் அமைதி என அனைத்தையும் நான் இழந்து விட்டேன். அநீதிக்கு எதிராக சண்டையிடுவதை மட்டும் இன்னும் நிறுத்தவில்லை. என்னை எவ்வளவு முறை பணியிட மாற்றம் செய்தாலும், நியாயத்திற்காக போராடுவதை நிறுத்த மாட்டேன். எனக்கு எங்கு பணி நியமனம் வழங்கப்பட்டாலும் நான் சேவை செய்வேன். தவறு செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்," என்று கூறியுள்ளார்.

Advertisement