அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்; இபிஎஸ் மனு தள்ளுபடி

20


சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இ.பி.எஸ்., பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்தத் தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செல்லும் என்று தெரிவித்தனர்.

Advertisement