கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த போலீஸ்காருக்கு பளார்; ஆந்திராவில் அமைச்சரின் சகோதரர் கைது

1

ஹைதராபாத்: ஆந்திராவில் கோவிலின் வி.ஐ.பி.,க்கான வழியில் நுழைவதற்கு அனுமதி மறுத்த போலீஸ்காரரை அறைந்த அமைச்சரின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

கர்னூல் மாவட்டத்தில் கோலிமிகுண்ட்லா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆந்திர பிரதேச அமைச்சர் பி.சி.ஜனார்த்தனன் ரெட்டியின் சகோதரர் மதன் பூபால் ரெட்டியும் அங்கு வந்துள்ளார். வி.ஐ.பி.,க்களுக்கான அவசர வழியில் தன்னை கோவிலுக்குள் அனுமதிக்குமாறு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த அவர் பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கான்ஸ்டபிள் ஜஸ்வந்த்தை ஓங்கி அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பொது இடத்தில் போலீஸ்காரரை அறைந்த அமைச்சரின் சகோதரர் மதன் பூபால் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; பணியில் இருந்த போலீஸ்காரரை அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரர் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின், ஆணவம் மற்றும் சட்டவிரோத செயல்களை வெளிக்காட்டுகிறது. பொது இடத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?, எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement