விசாரணைக்கு நாங்கள் அழைத்து வரவில்லை திருப்புவனம் போலீசார் தகவல்

1

திருப்புவனம்:போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரை ஸ்டேஷனுக்கு நாங்கள் அழைத்து வரவில்லை. கோயில் ஊழியர்கள் தான் அழைத்து வந்தனர் என திருப்புவனம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருப்புவனம் போலீசார் கூறியதாவது:

மடப்புரம் கோயிலுக்கு ஜூன் 27ம் தேதி திருமங்கலம் நிகிதா வந்த போது காரில் இருந்த நகை திருடு போனது.

நிகிதா வந்த காரை பார்க் செய்வதாக கூறி சாவியை வாங்கிய அஜித்குமாரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாததால் கோயில் அலுவலகத்தில் முறையிட்டார். அங்கும் நகை கிடைக்காததால் தான் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தார். அப்போதும் நிகிதாவின் காரை கோயில் அலுவலக ஊழியர் ராஜா என்பவர் தான் ஓட்டி வந்தார். கோயில் ஊழியர்கள் கண்ணன், பெரியசாமி தனித்தனியாக டூவீலரில் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அஜித்குமாரை அவருடன் பணியாற்றும் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் பிரவீன்குமார் டூவீலரில் அழைத்து வந்து தான் ஒப்படைத்தார்.

அதன்பின் இரவு 9:00 மணிக்கு மேல்தான் மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அஜித்குமாரை அழைத்துச் சென்றனர் என்றனர்.

ஜூன் 27ல் அஜித்குமார், நிகிதா, அவரது தாயார் சிவகாமி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போது அவர்களை யார் யார் சந்தித்தனர் எனவும் சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குடியிருப்பை காலி செய்த போலீசார் திருப்புவனம் காவலர் குடியிருப்பில் குடியிருந்த அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் வீடுகளை காலி செய்தனர்.ஜூன் 28ல் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையில் பணியாற்றிய கண்ணன் 47, ராஜா 36, ஆனந்த் 38, சங்கரமணிகண்டன் 36, பிரபு 42, ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இதில் பிரபு மானாமதுரையிலும், கண்ணன் பழையனுாரிலும், ராஜா பூவந்தியிலும் சங்கரமணிகண்டன் திருப்புவனத்திலும், ஆனந்த் சிவகங்கை போக்குவரத்து பிரிவிலும் பணியாற்றினர். இதில் பிரபு, ஆனந்த், கண்ணன் மூவரும் திருப்புவனம் காவலர் குடியிருப்பில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தனர். குடியிருப்பில் வசித்து வந்த மூவர் குடும்பங்களும் வீட்டை காலி செய்து விட்டனர். இதனால் சி.பி.ஐ.,அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீசாரின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.

கோயிலில் பணி அஜித்குமார் இறந்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. அஜித்குமார் சகோதரருக்கு அரசு பணி, குடும்பத்திற்கு நிவாரண நிதி என கோரிக்கை எழுந்தன.

அமைச்சர் பெரியகருப்பன் காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அஜித்குமார் சகோதரர் நவீன்குமாருக்கு பணி ஆணையும் தமிழக அரசு சார்பில் ஏழரை லட்ச ரூபாயும் வழங்கினார். ஆனால் காரைக்குடி 80 கி.மீ., துாரத்தில் உள்ள நிலையில் தினமும் சென்று வர முடியாது, தாயை தனியாக விட்டு விட்டு பணிக்கு செல்ல முடியாது, எனவே மடப்புரம் கோயிலிலேயே பணி வழங்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பனிடம் அஜித்குமார் குடும்பத்தினர் வலியுறுத்தினர். அஜித்குமார் உயிரிழந்து 30 நாட்கள் கடந்த நிலையில் சி.பி.ஐ., விசாரணையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் மடப்புரம் கோயிலிலேயே பணி வழங்க வேண்டும் என அஜித்குமார் குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement