பா.ஜ., கூட்டணிக்கு 'குட்பை'
சென்னை: பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவதாக, பன்னீர்செல்வம் தலைமையிலான, அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க.,வை பழனிசாமி ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வந்ததால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர் மீட்புக் குழு' என்ற அமைப்பை துவங்கி, கட்சிக்கு உரிமை கோரி வருகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு, அ.தி.மு.க.,வை பின்னுக்குத்தள்ளி, இரண்டாம் இடத்தை பிடித்தார். கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைந்த பின், பன்னீர்செல்வத்தை பா.ஜ., கண்டுகொள்ளவில்லை.
கடந்த 26ம் தேதி துாத்துக்குடி வந்த, பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு, அவர் கடிதம் எழுதியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், பா.ஜ.,வுக்கு எதிராக திரும்பிய பன்னீர்செல்வம், மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம், பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ராஜ்யசபா எம்.பி., தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டி:
பன் னீர்செல்வம் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளோம். விரைவில் தமிழகம் முழுதும் பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
தற்போதைய நிலையில், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். பா.ஜ.,வுடான கூட்டணி முறிவுக்கான காரணம் நாடறிந்தது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், சரியான கூட்டணி அமையும். யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே, எங்களது குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
