நாளை தீரன் சின்னமலை நினைவு தினம் விதிமீறல் கூடாது என போலீஸ் எச்சரிக்கை

ஈரோடு,அரச்சலுார் அருகே ஓடாநிலையில், தீரன் சின்னமலை மணி மண்டப வளாகத்தில், தீரன் சின்னமலை நினைவு தினம், அரசு விழாவாக நாளை அனுசரிக்கப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை, விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஒவ்வொரு கட்சி, அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அறிவித்துள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் கட்சியினர், அமைப்பினர் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்
நாளை நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து வருவோர், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கருங்கல்பாளையம் சோதனை சாவடி, கிருஷ்ணா தியேட்டர் ஜங்ஷன், பன்னீர்செல்வம் பூங்கா, காளை மாட்டு சிலை, மூலப்பாளையம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, அரச்சலுார், வடபழனி, ஓடாநிலைக்கு வரலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வருவோர், கொக்க ராயன்பேட்டை, பரிசல் துறை நால் ரோடு, முத்துகவுண்டன்பாளையம் ஜங்ஷன், ஆணைக்கல்பாளையம் நால் ரோடு, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, அரச்சலுார், ஓடாநிலையை அடையலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வருவோர், காங்கேயம், நத்தக்கடையூர், பழைய கோட்டை, வடபழனி, ஓடாநிலைக்கு வரலாம்.
சத்தி, கோபி, பெருந்துறை பகுதிகளில் இருந்து வருபவர்கள், பெருந்துறை, பெருந்துறை ரயில்வே ஸ்டேஷன், வெள்ளோடு, அனுமன்பள்ளி, தலவுமலை, அரச்சலுார், வடபழனி, ஓடாநிலைக்கு வரலாம்.
கரூர் மாவட்டத்தில் இருந்து வருவோர் சாலைப்புதுார், ஒத்தக்கடை, தாமரைப்பாளையம், அம்மன் கோவில், விளக்கேத்தி, வடுகப்பட்டி, அரச்சலுார், கைகாட்டி, வடபழனி, ஓடாநிலைக்கு வரலாம்.
மரியாதை செலுத்திய பின், ஓடாநிலையில் இருந்து வாழைத்தோட்டவலசு, கந்த சாமிபாளையம், மோளபாளையம் நால்ரோட்டில் இருந்து விளக்கேத்தி, மொடக்குறிச்சி வழியாக ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு செல்லலாம். திருப்பூர் மாவட்டம் செல்பவர்கள் மோளபாளையம் நால் ரோட்டில் இருந்து முத்துார் வழியாக காங்கேயம், திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு செல்லலாம். இத்தகவலை எஸ்.பி., சுஜாதா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு

மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் நேற்று, ஈரோடு வந்தார். எஸ்.பி., அலுவலகம் வந்தவரை, எஸ்.பி., சுஜாதா வரவேற்றார். நாளை ஓடாநிலையில் நடக்கும் தீரன் சின்ன மலை நினைவு நாள் விழா முன்னேற்பாடு, பாதுகாப்பு பணி, வாகன ரோந்து உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.
ஈரோடு மாநகரம், பிற மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்கள், நிகழ்ச்சிக்காக வரும் வாகனங்கள் வந்து செல்லும் வழிகளின் 'ரூட்-மேப்பை' ஆய்வு செய்தார். பின், ஓடாநிலை வரை காரில் சென்று, பாதுகாப்பு ஏற்பாடு, போலீசார் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் பற்றி யோசனை தெரிவித்து சென்றார்.

Advertisement