மறைந்த நடிகர் ராஜ்குமார் சகோதரி நாகம்மா மறைவு

பெங்களூரு: மறைந்த நடிகர் ராஜ்குமாரின் சகோதரி நாகம்மா, 94, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

மறைந்த நடிகர் ராஜ்குமாரின் சகோதரி நாகம்மா. கர்நாடகா - தமிழகம் எல்லையான கஜனுார் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது காரணமாக பலவீனமாக காணப்பட்ட அவர், நேற்று காலை இறந்தார்.

இதையறிந்த நடிகர்கள் சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கிராமத்துக்கு சென்றனர். இன்று காலை, நாகம்மாவின் கணவரின் கல்லறை அருகில், அவரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

நாகம்மாவுக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள். நாகம்மாவின் ஆரம்பகாலத்தில் சென்னையில் இருந்தபோது, அவர்களின் குழந்தைகளை, மறைந்த நடிகர் ராஜ்குமார் பராமரித்து வந்தார்.

ஓய்வு நாட்களில் தங்கை குடும்பத்துடன் வசிப்பதற்காக, கஜனுார் கிராமத்தில் ராஜ்குமார் வீடு கட்டினார். இவ்வீட்டில் மூத்த மகன் கோபாலுடன் நாகம்மா வசித்து வந்தார்.

நடிகர் புனித் ராஜ்குமார் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். அதனால், அவரின் மறைவு கூட, இதுவரை நாகம்மாவுக்கு தெரிவிக்கப்படவில்லை.

Advertisement