திருமலையில் 'ரீல்ஸ்' எடுக்க தடை

திருப்பதி: ' திருமலை ஏழுமலையான் கோவில் வளாகத்தில், 'ரீல்ஸ்' எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலையில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, தினமும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக வருகின்றனர்.
அவர்களில் சிலர், 'ரீல்ஸ்' எனப்படும், பொழுதுபோக்கு குறும்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகின்றனர். இதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சில தனிநபர்கள், திருமலை கோவில் வளாகத்தில் குறும்புத்தனமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் சமீபத்தில் பதிவேற்றியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் பக்தர்களின் உணர்வுளை புண்படுத்துவதுடன் கோவிலின் புனிதத்தையும் மீறுவதாகும்.
எனவே, 'ரீல்ஸ்'களை பக்தர்கள் கோவில் வளாகத்தில் எடுக்கக் கூடாது. ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வீடியோவாக எடுப்பவர்கள் மீது போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பர். எனவே, கோவில் வளாகத்தில் ஆன்மிக சூழலை பேணவும், கோவிலின் புனிதத்தை பாதுகாக்கவும் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.