தமிழகத்தில் ஆன்மிக கலாசார இடங்களை கண்டறிய குழு அமைக்கிறது மத்திய அரசு

சென்னை : தமிழகத்தில் வரலாறு, ஆன்மிகம் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கண்டறிய, குழு அமைக்க மத்திய கலாசாரத் துறை முடிவு செய்துள்ளது.


உலகிலேயே முதன்முதலில், தமிழகத்தில் தான் இரும்பு பயன்பாடு துவங்கியது என்பதை உறுதி செய்யும், சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு அறிக்கையை, மத்திய பா.ஜ., அரசு ஏற்க மறுப்பதாக தி.மு.க., அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.


அத்துடன், தமிழ் கலாசாரத்திற்கு எதிராக, மத்திய பா.ஜ., அரசு செயல்படுவதாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வரும் தொடர் பிரசாரம், பா.ஜ.,வுக்கும், சங் பரிவார் அமைப்புகளுக்கும் தமிழகத்தில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதை, தமிழக பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.



1983 முதல் அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வரும், 'கங்கைகொண்ட சோழபுரம் வளர்ச்சி குழு' நிர்வாகிகள், மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகி யோரிடம் தெரிவித்தனர். அதை தொடர்ந்தே, கங்கைகொண்ட சோழ புரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

பிரதமர் மோடியின் கங்கைகொண்ட சோழபுரம் வருகை, தமிழக மக் களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக, மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறப் படுகிறது.


அதை தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற கலாசார, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் மற்றும் இடங்களை கண்டறிய, மத்திய கலாசாரத்துறை சார்பில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



தமிழ் பண்பாடு, கலா சாரத்திற்கு பா.ஜ., எதிரி என்பது போன்ற தோற்றத்தை தி.மு.க., ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.,வுக்கு எதிரான ஆயுதமாக தொல்லியல் அகழாய்வு களையும் பயன்படுத்தி வருகிறது. தி.மு.க.,வின் இந்த சதியை முறியடிக்க களம் இறங்கியுள்ளோம்.




தமிழகத்தில் கங்கைகொண்ட சோழபுரம் போன்று, வரலாறு, கலை, கலாசாரம், ஆன்மிகம், தொல்லியல் முக்கியத் துவம் வாய்ந்த கோவில்கள் மற்றும் இடங்களை கண்டறிய, மத்திய கலாசாரத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.



அப்படி கண்டறியப்படும் இடங்களில் மேம்பாட்டு பணிகள் செய்வது, விழாக்கள், கருத்தரங்குகள் நடத்துவது, ஆவணப்படங்கள், புத்தகங்கள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, கலாசாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களை கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement