தமிழகத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணி; காங்., பொதுச்செயலர் வேணுகோபால் ஆர்வம்

10

கேரள முதல்வராகும் கனவில் இருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், தமிழகத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டுகிறார். அவருடன், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலரும் கைகோர்த்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக காங்கிரசில் ஒரு தரப்பு, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும்; இன்னொரு தரப்பு, விஜய் கட்சியான; த.வெ.க.,வுடன் கூட்டணி சேர ஆதரவாகவும் உள்ளனர்.


காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, பெரும்பான்மை காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


த.வெ.க.,வுடன் கூட் டணி அமைக்கும் முயற்சியில் தென் மாவட்ட எம்.பி., ஒருவரும், கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவரும் கைகோர்த்து செயல்படுகின்றனர்.




டில்லியில் நேற்று முன் தினம், சோனியா, ராகுல், பிரியங்கா மூவரையும் சந்தித்து, கூட்டணி தொடர்பாக தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேசியுள்ளார்.



அப்போது, ராகுலிடம் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார். அந்த மனுவில், குஜராத் மாநிலத்தை போலவே, தமிழகத்திலும் மாவட்டத் தலைவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான கூட்டணி வியூகத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.




சோனியாவை சந்திப்பதற்கான அனுமதியை, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூரும், காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலும் அவருக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.



விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தமிழக கோஷ்டி தலைவர்கள் சிலரை போலவே வேணுகோபாலும் ஆர்வம் காட்டுகிறார்.



அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுடன், கேரள சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து விட்டால், கேரளாவில் காங்கிரசுக்கு சாதகமாக அமையும். அதாவது, விஜய்க்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.



அவர்களின் ஓட்டு வங்கி, அம்மாநிலத்தில், காங்., வெற்றிக்கு கை கொடுக்கும் என கணக்கு போடுகிறார். அப்போது தான், அம்மாநிலத்திற்கு முதல்வராகும் தன் கனவு நிறைவேறும் என்றும் வேணுகோபால் கருதுகிறார்.



இதற்கிடையில், மாவட்டத் தலைவர்கள் நியமனம், மாநில மாநாடு குறித்து மேலிடத் தலைவர்களிடம் ஆலோசிக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் டில்லி செல்கிறார்.



- நமது நிருபர் -

Advertisement