தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

சென்னை; தந்தையாக வெற்றி பெற்ற வைகோ, ஒரு அரசியல் தலைவராக தோற்று போயிருக்கிறார் என்று அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டி உள்ளார்.
மதிமுகவில் வைகோ, அவரது மகனும், முதன்மைச் செயலாளருமான துரை வைகோ ஆகியோருக்கும், கட்சியின் துணை பொதுச் செயலாளரான மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இரு தரப்பினரும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.
வைகோ, துரை வைகோ இருவருக்கும் எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்த மல்லை சத்யா, மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் கோரியும், வைகோவை கண்டித்தும் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து இருந்தார். தம்மை துரோகி என்று வைகோ சுமத்திய குற்றச்சாட்டுக்கு நீதி கேட்டு இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறி இருந்தார்.
அதன்படி, சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மல்லை சத்யா தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். போராட்டத்திற்கு முன்னதாக அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
வழக்கமாக ஒரு தலைவன், கட்சி என்று வருகிற போது, ஒரு தொண்டனின் பக்கம் நிற்காத பொது சமூகம், முதன் முதலில் ஒரு தொண்டனின் நியாயத்தை எடுத்துச் சொல்லி இருப்பது காயம்பட்ட மனதுக்கு மருந்தாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. எனவே தமிழ் கூறும் நல்லுலகம் எங்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
என் அரசியல் முகவரி வைகோ தான். நான் கண்டதும் கொண்டதும் வைகோ மட்டுமே. மதிமுக பயணம் என்ற பெயரில் நான் இன்னமும் துணை பொதுச் செயலாளர் தான். அவர்கள் என்னை நீக்கவில்லை, நானும் இன்னும் விலகவில்லை. மதிமுகவில் எனது பயணம் தொடரும்.
4 ஆண்டுகளாக துரை வைகோ எனக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தி தோல்வியை தழுவினார். இறுதியாக எனது தலைவரை(வைகோ) முன்னிறுத்தி செய்து வருகிறார். தந்தையாக அவர் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் ஒரு அரசியல் தலைவராக மதிமுகவில் வைகோ தோற்று இருக்கிறார்.
அவர்கள் சமரசத்திற்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்திருக்கிறார்கள். இது எனக்காக வந்த கூட்டமல்ல, துரை வைகோவை பிடிக்காதவர்கள் தான் இங்கு வந்திருக்கிறார்கள்.
இந்த போராட்டம் வைகோவை எதிர்த்து அல்ல, நாட்டு மக்களிடம் நீதி கேட்பதற்காக. மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகத்தை வைகோ பாதுகாக்க வேண்டும். இந்த கட்சியில் தான் நான் தொடர்ந்து நீடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் மல்லை சத்யா ஆதரவாளர்களும் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்று(ஆக.2) மாலை 5 மணி வரை நடக்கிறது.
போராட்டம் துவங்குவதற்கு முன்னதாக, முன்னாள் முதுல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும்
-
போதைப்பொருள் கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; இபிஎஸ் வேண்டுகோள்
-
சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ அதிகாரி சடலமாக மீட்பு
-
பாலியல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் : ராகுலை எச்சரித்த ராஜ்நாத்சிங்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி