பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை, பாலியல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. உடல் பாகங்களை ஒப்பீடு செய்யும் உயர் தொழில்நுட்பத்தை ஆதாரமாக கொண்டு, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் பெண்களை ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34, பலாத்காரம் செய்யும் வீடியோ, புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் பரவின. இதைத் தொடர்ந்து, ரேவண்ணா வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த, 47 வயது பெண், ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
விசாரணை
இதையடுத்து பிரஜ்வல் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது. மே 31ம் தேதி பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரஜ்வலை, எஸ்.ஐ.டி., குழுவினர் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தினர்.
குற்றவாளி
அதன் பின், 123 ஆதாரங்களை திரட்டி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், 2024 இறுதியில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் 1,652 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் அறிவித்தார். இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
சிக்கியது எப்படி?
இந்த வழக்கில் போலீசாருக்கு இருந்த சவால், ஆபாச வீடியோவில் இருக்கும் நபர், பிரஜ்வல் தான் என்று நிரூபணம் செய்வது தான். அனைத்து வீடியோக்களிலும், முகம் இல்லாத வகையில் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
ஆண் இடுப்புக்கு கீழே தான் இருப்பது போல மட்டுமே காட்சிகள் இருந்தன. இந்த காட்சியில் இருப்பவர், பிரஜ்வல் தான் என்பதை நிரூபணம் செய்வதற்கு, பாரன்சிக் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
ஆணுறுப்பின் உடற்கூறுகளை ஒப்பீடு செய்யும் நடைமுறையை அலுவலர்கள் பயன்படுத்தினர். இந்த நுட்பம் தான், குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அந்த ஆபாச வீடியோக்களில் முகம் இல்லாவிட்டாலும், இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதிகள் மிகத்தெளிவாக உள்ளன. அந்த காட்சியில் தெரியும் உடல் உறுப்புகளை ஒப்பீடு செய்வதற்காக, தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தடயவியல் நிபுணர்கள் சொல்வது என்ன?
தடயவியல் மருத்துவ நிபுணர்கள், தோல் மருத்துவ நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள் ஆகியோர் முன்னிலையில், சட்டபூர்வமான ஒப்புதல் பெற்று, மருத்துவர் மேற்பார்வையில் பிரஜ்வலின் உடல் அந்தரங்க உறுப்புகள் படம் பிடிக்கப்பட்டன. மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டது.
இவ்வாறு எடுக்கப்பட்ட படங்களும், வீடியோவில் இருக்கும் முகம் இல்லாத படங்களும் ஒப்பீடு செய்யப்பட்டன. இந்த ஒப்பீட்டில், இரு படங்களிலும் இருப்பது ஒருவர் தான் என்று ஆதாரபூர்மாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.






மேலும்
-
போதைப்பொருள் கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; இபிஎஸ் வேண்டுகோள்
-
சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ அதிகாரி சடலமாக மீட்பு
-
பாலியல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் : ராகுலை எச்சரித்த ராஜ்நாத்சிங்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி