பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து

லாகூர்; பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. அந்நாட்டில் 15 நாட்களில் நிகழ்ந்த 3வது விபத்து இதுவாகும்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு இஸ்லாமாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.


ஷேக்புரா மாவட்டத்திற்குள் இந்த ரயில் நுழைந்த போது, காலாஷா காக்கு என்ற இடத்தில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.


ரயில் விபத்தை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருக்கு போராடினர். இது குறித்து தகவலறிந்த ரயில்வே மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


விபத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்புப் படையினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 30 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜூலை 17, ஜூலை 28 ஆகிய நாட்களில் ஜபார் எக்ஸ்பிரஸ் 2 முறை விபத்தில் சிக்கியது. தற்போது, இஸ்லாமாபாத் எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தான் கடந்த 15 நாட்களில் நிகழும் 3வது ரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement