பள்ளி சீருடையில் மாணவர்கள் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

அரூர்:பள்ளி சீருடையில் மாணவர்கள் புகை பிடிக்கும் வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், டீக்கடை ஒன்றில் அமர்ந்து, அரசு பள்ளி மாணவர்கள் மூவர் சீருடையுடன் ஹாயாக புகை பிடிக்கின்றனர். இந்த காட்சி, 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சில ஆண்டுகளாக, அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் சிகரெட் மற்றும் கஞ்சா புகைத்தல் போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், சொலியூசன் பசையை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சமீபமாக, பள்ளி வளாகம், பஸ் ஸ்டாண்ட், டீக்கடை என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், எவ்வித அச்சமின்றி சிகரெட் புகைத்து வருகின்றனர். இந்நிலையில், அரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள டீக்கடை ஒன்றில், அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் சிகரெட் புகைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவர்களுக்கு போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement