பணிப்பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளி பிரஜ்வலுக்கு தண்டனை இன்று அறிவிப்பு

2

பெங்களூரு : கர்நாடகாவில், பணிப்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் நேற்று தீர்ப்பளித்தார். இதை கேட்ட பிரஜ்வல் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப் படுகிறது.




கடந்தாண்டு ஏப்ரலில் பெண்களை ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34, பலாத்காரம் செய்யும் வீடியோ, புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் பரவின.



சிறப்பு புலனாய்வு குழு இதை அறிந்த பிரஜ்வல், ஜெர்மன் நாட்டுக்கு தப்பினார். அங்கிருந்தபடி, 'தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், பெங்களூரு வந்ததும் உண்மை தெரியவரும்' என்று, 'வீடியோ' மூலம் கூறியிருந்தார்.



இதைத் தொடர்ந்து, ரேவண்ணா வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த, 47 வயது பெண், ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் புகார் அளித்தார்.



அதில், 'ஹாசனில் கன்னிகார்க்கில் உள்ள ரேவண்ணாவின் பண்ணை வீட்டில், 2021ல் பிரஜ்வல் ரேவண்ணா, என்னை பலாத்காரம் செய்தார்.



'அதுபோன்று, பெங்களூரு பசவனகுடியில் உள்ள ரேவண்ணாவின் வீட்டிலும் என்னை பலாத்காரம் செய்தார்.



'இரு இடங்களிலும் வீடியோவாக பதிவு செய்த அவர், இவ்விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார்' என குறிப்பிட்டிருந்தார்.



இதையடுத்து பிரஜ்வல் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது. மே 31ம் தேதி பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரஜ்வலை, எஸ்.ஐ.டி., குழுவினர் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தினர்.




அதன் பின், 123 ஆதாரங்களை திரட்டி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், 2024 இறுதியில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் 1,652 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.



தள்ளுபடி இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



மேலும், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி, சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.



இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு, ஜூலை 30ல் அறிவிக்கப்படும் என, சிறப்பு நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் அறிவித்தார். சில சந்தேகங்கள் இருந்ததால், தீர்ப்பு நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு பிரஜ்வல் அழைத்து வரப்பட்டார்.



நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் கூறுகையில், ''பிரஜ்வலுக்கு எதிராக போலீஸ் தரப்பில் சமர்ப்பித்த ஆதாரங்கள், சாட்சிகளின் அடிப்படையில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படுகிறது. தண்டனை விபரம் நாளை (இன்று) அறிவிக்கப்படும்,'' என்றார்.

குற்றவாளி என நீதிபதி அறிவித்ததை கேட்ட பிரஜ்வல், கண்ணீர் விட்டு அழுதார்.

இச்செய்தியை கேட்ட ரேவண்ணா குடும்பத்தினரும், தேவகவுடா, குமாரசாமி குடும்பத்தினரும் வேதனை அடைந்ததாக தகவல் வெளியானது.




இவ்வழக்கு தவிர, பிரஜ்வல் மீது ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான 44 வயது பெண்ணையும்; மைசூரில் 60 வயது வீட்டு பணிப்பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும்; வீடியோ காலில் பாலியல் தொல்லை கொடுத்தது என, மேலும் மூன்று வழக்குகள் உள்ளன.

Advertisement