ரூ.3 ஆயிரம் கோடி கடன் மோசடி; அனில் அம்பானி விவகாரத்தில் அமலாக்கத்துறை முதல் கைது நடவடிக்கை

புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில், அமலாக்கத்துறை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 2017 - 19ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்த நிலையில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இந்த வழக்கில், அமலாக்கத்துறை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் போலி வங்கி உத்தரவாதம் பெற உதவியதாக, 'பிஸ்வால் டிரேட்லிங்க்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத்துறை 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

