எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்

20

புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்ததற்காக மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மிரட்டியதாக, காங்கிரஸ் எம்பி ராகுல் புகார் கூறியதற்கு அவரது மகன் ரோஹன் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார்.

டில்லியல் நடந்த 2025ம் ஆண்டு வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் பேசுகையில், '

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்தது. தற்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை நான் எதிர்த்த போது, அருண் ஜெட்லி என்னை மிரட்ட என்னிடம் அனுப்பப்பட்டார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

நடவடிக்கை



நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்து, விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தால், நாங்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரைப் பார்த்து, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்' என தெரிவித்தார்.

ராகுலுக்கு பதிலடி



முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீதான ராகுலின் குற்றச்சாட்டினை அவரது மகன் ரோஹன் ஜெட்லி மறுத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனது மறைந்த தந்தை அருண் ஜெட்லி வேளாண் சட்டங்கள் தொடர்பாக தன்னை மிரட்டியதாக ராகுல் இப்போது கூறுகிறார்.

அவருக்கு நினைவூட்டுகிறேன், என் தந்தை 2019ல் காலமானார். வேளாண் சட்டங்கள் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக முக்கியமாக, எதிர்க்கும் பார்வையில் யாரையும் அச்சுறுத்துவது என்பது எனது தந்தை இயல்பு அல்ல. அவர் உறுதியான ஜனநாயகவாதி, ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தார்.

வார்த்தைகளில்....!



அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்குமானால் அவர் விவாதத்துக்கு அழைத்து அனைவருடனும் பேசி ஏற்றுக்கொள்ளும் படியான தீர்வை உருவாக்கி இருப்பார். இத்தனை காலமாக அது தான் அவரது பெருமையாக இருந்து வருகிறது. உயிருடன் இல்லாதவர்கள் பற்றி பேசும் போது, வார்த்தைகளில் கவனத்துடன் இருந்தால் நான் ராகுலை பாராட்டுவேன்.



அவர் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கடைசி நாட்களை பற்றி பேசியது போலவே எனது தந்தையை பற்றியும் ஏதோ பேச முயற்சிக்கிறார். இதேபோலவே அதுவும் மோசமான கருத்தாக இருந்தது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.

Advertisement