தோப்புக்கரணம் போட்ட அதிகாரி பணியிட மாற்றம்

1

லக்னோ : உத்தர பிரதேசத்தில், போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் முன் தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள போவாயன் தாலுகாவின் சப் - கலெக்டராக, 2022 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, கடந்த மாதம் 28ம் தேதி நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில், தாலுகா அலுவலக வளாகத்தில் ஆய்வு செய்த அவர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் உரையாடினார். அப் போது அவரிடம், 'தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உள்ளது' என, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்டு வருத்தமடைந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, பிரச்னைக்கு பொறுப்பேற்று, வழக்கறிஞர்கள் முன் ஐந்து முறை தோப்புக்கரணம் போட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹியை, சப் - கலெக்டர் பதவியில் இருந்து விடுவித்து, லக்னோவில் உள்ள வருவாய் வாரியத்துக்கு மாற்றி மாநில பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement