வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி

26

பாட்னா: பீஹார் வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை என்று எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பீஹார் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோத வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பார்லிமென்டில் இதை முன்னிறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த நிலையில், பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது; ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்கள் வரையில் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பபட்டுள்ளது. பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


அதேவேளையில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர், பூத் எண் மற்றும் வாக்காளர் எண் போன்ற விபரங்களை கொடுக்காததால், நீக்கப்பட்டவர்களின் விபரங்களை கண்டறிய முடியவில்லை.

என்னுடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அப்புறம் எப்படி நான் தேர்தலில் போட்டியிட முடியும்?, என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், திஹா தொகுதியின் வாக்காளர் பட்டியலின் 416வது எண்ணில் தேஜஸ்வியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பதிலளித்துள்ளது.

Advertisement