71வது தேசிய விருதுகள் அறிவிப்பு 'பார்க்கிங்' படத்துக்கு 3 அவார்டு

புதுடில்லி கடந்த, 2023ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான, பார்க்கிங் திரைப்படம் மூன்று விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரைத்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து, தேசிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. 2023ம் ஆண்டுக்கான, 71வது தேசிய விருதுகள் டில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில், சிறந்த படமாக ஹிந்தி திரைப்படமான, 12த் பெயில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பொழுது போக்கு சித்திரமாக ஹிந்தியில் வெளியான ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி படம் அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகராக ஜவான் ஹிந்தி படத்தில் நடித்த ஷாரூக் கான், 12த் பெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாசே ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

தேர்வு சிறந்த நடிகையாக, மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே ஹிந்தி படத்தில் நடித்த ராணி முகர்ஜி அறிவிக்கப்பட்டார். துணை நடிகர் பிரிவில், பூக்காலம் மலையாள படத்தில் நடித்த விஜயராகவன், பார்க்கிங் தமிழ் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

சிறந்த துணை நடிகை விருது, உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்த ஊர்வசி மற்றும் வஷ் குஜராத்தி மொழி படத்தில் நடித்த ஜங்கி போதிவாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

தனுஷ் நடித்த வாத்தி தமிழ் படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் அனிமல் ஹிந்தி படத்துக்கு பின்னணி இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் ஆகியோர் சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மொழியில் சிறந்த படமாக ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது, இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி மலையாள படத்துக்கு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மலையாள மொழியில் சிறந்த படமாக உள்ளொழுக்கு படமும், தெலுங்கு மொழியில் சிறந்த படமாக பகவந்த் கேசரி படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆவண படம் திரைப்படம் அல்லாத பிரிவில், தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்க்ஸ் படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டது. சரவண மருது சவுந்திர பாண்டி, மீனாட்சி சோமன் ஆகியோர் இந்த ஆவண படத்துக்கு ஒளிப்பதிவு செய்தனர்.

தி டைம்லெஸ் தமிழ்நாடு என்ற ஆங்கிலப்படத்துக்கு, சிறந்த கலை கலாசார படத்துக்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement