பன்னீர்செல்வம் முடிவுக்கு காரணம் தெரியவில்லை: பா.ஜ.,

மதுரை : “பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, பன்னீர்செல்வம் தரப்பினர் கேட்டால் கண்டிப்பாக பிரதமருடன் சந்திக்க வைப்போம்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவர் பன்னீர்செல்வத்துடனும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுடனும் ஏற்கனவே பேசிக் கொண்டுதான் இருந்தேன். பன்னீர் செல்வத்துக்கு வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா? அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை.

தனிப்பட்ட காரணங்களால், இம்முடிவை எடுத்திருக்கலாம். அவர் அறிக்கை வெளியிடும் முன் அவரிடம், 'எந்த முடிவும் எடுக்க வேண்டாம்' என தொலைபேசியில் கேட்டுக்கொண்டேன். அதன்பின்னும் எதற்காக வெளியேறினார் என்று தெரியவில்லை.

பிரதமர் மோடியை சந்திக்க அவர் என்னிடம் கேட்டிருந்தால் அனுமதி வாங்கி கொடுத்திருப்பேன். அழுத்தத்தால் கூட்டணியில் இருந்து அவர் வெளியேறவில்லை. அவரது விலகலால் எங்கள் கூட்டணிக்கு பலவீனமா, இல்லையா என்பது தேர்தலில் தெரியும். பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, பன்னீர்செல்வம் தரப்பினர் கேட்டால் கண்டிப்பாக பிரதமருடன் சந்திக்க வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement