ஜிப்மர் பணிக்கான தேர்விற்கு புதுச்சேரியில் மையம் சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: ஜிப்மர் பணிக்கான தேர்விற்கு புதுச்சேரியில் மையம் அமைக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.

அவரது அறிக்கை:

ஜிப்மர் நிர்வாகம், புதுச்சேரி மாணவர்களையும், நோயாளிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதுவரையில் ஜிப்மரில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு எழுத்து தேர்வு புதுச்சேரியில் நடத்தப்படும்.

தற்போது 700க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தும் பணியை டில்லிக்கு ஒப்படைத்துள்ளது. தேர்வு நடத்தும் உரிமையை டில்லி வசம் ஒப்படைத்ததால் தேர்வு மையம் புதுச்சேரியில் அமைக்கப்படவில்லை.

இதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரியில் அமைந்திருப்பதால், மாநிலத்தின் நல்வாழ்வு மற்றும் நலனுக்கான தார்மீகப் பொறுப்பை கொண்டுள்ளது.

எனவே, சி.ஆர்.இ., மற் றும் என்.ஓ.ஆர்.சி.இ.டி ., (நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வுக்கான) மைய ஒதுக்கீட்டை புதுச்சேரியில் மீண்டும் துவங்கவும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவும் ஜிப்மர் இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஜிப்மர் பணிக்கான தேர்வை புதுச்சேரியிலேயே நடத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க., முன்னெடுக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement