மாநில அளவிலான புத்தாக்க போட்டி தியாகதுருகம் பள்ளி மாணவிகள் அசத்தல்

கள்ளக்குறிச்சி : மாநில அளவிலான புத்தாக்க போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தியாகதுருகம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புத்தாக்கப் போட்டி நடத்தியது. இதில் தமிழ்நாடு முழுதும் 46,246 குழுக்கள் பதிவு செய்ததில் 153 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதிலிருந்து 45 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றனர்.

புத்தாக்க போட்டிகளில், மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்தினார். அப்போது சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட திட்ட மேலாளர் அறிவொளி உட்பட மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement