மாநகராட்சி  அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு

கோவை:
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பணிக்கு மாநகராட்சி அலுவலர்கள் சென்று விடுவதால், மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தவிர்த்து, மீதமுள்ள நான்கு நாட்கள் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப் படுகிறது. கோவை நகரில் நடத்தும் முகாம்களில், 13 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற் கின்றனர்.

உதவி கமிஷனர் தலைமையில், நிர்வாக அலுவலர், கண்காணிப்பாளர்கள், வரி வசூலர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் என, 60 பேர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, உரிமைத்தொகை விண்ணப்பம் பெற, 20 வார்டுகளில் இருந்து, வார்டுக்கு தலா ஐந்து பேர் வீதம், 100 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, நியமிக்கப்படுகின்றனர்.

இதேபோல், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ்வகையில், ஒரு முகாமில் மட் டும், 250 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் மற்ற அரசு துறை அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.

நேற்றைய தினம், மத்திய மண்டலம், 63வது வார்டுக்கான முகாம் சிவானந்தா காலனியில் உள்ள மண்டபத்தில் நடந்தது; மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் தலைமையில் மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர். காலை, 9:00 முதல் இரவு, 7:00 மணி வரை அலுவலர்கள் பணிபுரிந்ததால், மத்திய மண்டல அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நடைபெறவில்லை.

Advertisement