போதைப்பொருள் கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; இபிஎஸ் வேண்டுகோள்

தூத்துக்குடி: "போதைப் பொருள் கலாசாரத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தூத்துக்குடியில் இன்று தொழில் முனைவோர், உப்பு உற்பத்தியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இபிஎஸ் இடம் கூறியதாவது:
தமிழகத்தில் சாலை விரிவாக்கம் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி கொடுத்ததும் பிறகும் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.
சென்னை, மும்பையை போன்று ரயில் மையம் வேண்டும். தூத்துக்குடிக்கு கனரக தொழிற்சாலை வர வேண்டும்.
தொழில் பூங்கா அமைக்க வேண்டும் விண்வெளி பூங்கா அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். பாண்டிச்சேரியில் இருந்து அமைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையை தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
தூத்துக்குடிக்கு நாள்தோறும் வரும் 5 ஆயிரம் லாரிகளை நிறுத்துவதற்கு இடம் இல்லை. இடம் அமைத்து தர வேண்டும்.தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கிடப்பில் போடப்பட்ட தூண்டில் பாலத்தை முழுமையாக அமைக்க வேண்டும்.
மீன் பிடித்ததை கால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ள மீட்பதற்கு ஹெலிகாப்டர் வசதி தேவை. தூத்துக்குடியில் சாலை வசதி நன்றாக அமைத்து தர வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் . பனை பொருட்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டி தயாரிக்க வேண்டும், என்றனர்.
மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மத பாதிரியார்கள், "எங்களுக்கு மத சுதந்திரம் வேண்டும். ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதிப்பதில் பல சிக்கல்கள் எழுகிறது.
தேவ ஆலயங்களை புனரமைப்பதற்கு கூட முடியாமல் உள்ளனர். பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். புனித வெள்ளி அன்றாவது மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் சிற்றாலயங்கள் அமைத்தால் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்ய வாய்ப்பாக இருக்கும்.
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துகின்றனர்.
அரசாங்கத்தின் உதவியோடு தான் போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது. அரசு போதைப் பொருள் கலாசாரத்தை இரும்பு க்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதை நீங்கள் முதல்வர் ஆகி தான் செய்ய வேண்டும் என்று இல்லை. இப்போதே நீங்கள் இறங்கி போராடினால் செய்யலாம் என்றனர்.
இதனைத் தொடர்ந்து இபிஎஸ் பேசியதாவது: அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தரப்படும். தமிழகத்தில் அதிகமாக சாலை விரிவாக்கம் செய்தது அதிமுக அரசு தான். சாலை விரிவாக்கம் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி கொடுத்ததும் பிறகும் இந்த அரசு இதை கிடப்பில் போட்டுள்ளது.
பல சாலைகள் தமிழகத்தில் வருவதற்கு காரணமாக இருந்தது அதிமுக அரசு தான். நான் எதிர்க்கட்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்ய முடியும்? சட்டசபையில் பேசுகிறேன்.
பள்ளி கல்லூரிகள் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக 2348 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 141 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர். அரசு சரியான நடவடிக்கை எடுத்தால் தான் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும். சட்டசபையிலும் இது குறித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
இந்த அரசு சரியான கவனம் செலுத்தாத காரணத்தால் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. கொலை கொள்ளை நடப்பதற்கு காரணமே இந்த போதை தான். இந்த அரசு இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. காவல்துறை பாதுகாப்போடு கைதியை அழைத்துச் செல்லும்போது போலீசார் வாகனத்திற்கு உள்ளேயே போதைப்பொருளை கொடுக்கின்றனர்.
கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது .
போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் தான் இதை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் கஷ்டம் எங்களது ஆட்சியல் எப்படி சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிந்து விடும். போதைப்பொருள் புழக்கத்தை இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எங்களது அரசு அமைந்த பிறகு இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.



