பாலியல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை

21

பெங்களூரூ: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


@1brகடந்தாண்டு ஏப்ரலில் பெண்களை ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34, பலாத்காரம் செய்யும் வீடியோ, புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் பரவின. இதைத் தொடர்ந்து, ரேவண்ணா வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த, 47 வயது பெண், ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.


இதையடுத்து பிரஜ்வல் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது. மே 31ம் தேதி பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரஜ்வலை, எஸ்.ஐ.டி., குழுவினர் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தினர்.

அதன் பின், 123 ஆதாரங்களை திரட்டி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், 2024 இறுதியில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் 1,652 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் அறிவித்தார். தீர்ப்பை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement