செக்' மோசடி வழக்கில் பொத்தனுார் டவுன் பஞ்., துணை தலைவருக்கு சிறை; ரூ.7 லட்சம் அபராதம்

ப.வேலுார் :'செக்' மோசடி வழக்கில், தி.மு.க.,வை சேர்ந்த பொத்தனுார் டவுன் பஞ்., துணை தலைவருக்கு, ஆறு மாத சிறை தண்டனை, ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, பரமத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பொத்தனுாரை சேர்ந்தவர் அன்பரசு, 50; இவர் பொத்தனுார் டவுன் பஞ்., 3வது வார்டு கவுன்சிலராகவும், டவுன் பஞ்., துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார். கடந்த, 2022ல், ப.வேலுார் தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி மகன் சண்முகத்திடம், 7 லட்சம் ரூபாயை அன்பரசு கடனாக பெற்றுள்ளார்.
பின், அந்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறிய அன்பரது, காசோலை ஒன்றை சண்முகத்திடம் வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, 'பணம் இல்லை' என திரும்பியது. இது தொடர்பாக, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில், சண்முகம் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், அன்பரசு பணம் பெற்றுக்கொண்டு, காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பரமத்தி நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ், கடந்த, ஜூலை, 31ல் தீர்ப்பளித்தார். அதில், பொத்தனுார் டவுன் பஞ்., துணை தலைவர் அன்பரசுக்கு, ஆறு மாதம் சிறை, 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அபராத தொகையை புகார்தாரருக்கு இழப்பீடாக, ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும். திருப்பி செலுத்தாதபட்சத்தில், மேலும், மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

Advertisement