ஓபிஎஸ் என்னை குறை சொல்கிறார்; நான் அவரை குறை சொல்ல மாட்டேன்: நயினார் நாகேந்திரன்

12


பவானி: என்னையோ எனது உதவியாளரையோ ஓபிஎஸ் அழைக்கவில்லை. ஓபிஸ் என்னைப் பற்றி குறை கூறுகிறார்; நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்ற அதிருப்தியில் ஓபிஎஸ் கூட்டணியில் விலகியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே, நிருபர்களிடம் ஓபிஎஸ் என்னை தொடர்பு கொண்டு இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்து இருப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

பிரதமரை சந்திப்பது தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு பதிலளித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் ''பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை. 6 முறை போனில் தொடர்புகொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை'' என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.



இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 03) ஈரோடு மாவட்டம், பவானியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கடிதம் அனுப்பி இருக்கிறார் என்று சொன்னது எனக்கு தெரியவில்லை. அந்த கடிதம் இன்னும் வந்து சேரவில்லை. அவர் கடிதம் வந்து சேர்ந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு எடுத்து காட்டுகிறேன். அப்போது யார் உண்மையை சொல்லி இருக்கா, யார் பொய் சொல்லி இருக்கா என்பது உங்களுக்கு தெரியும்.

இந்த மாதிரி...!



எதையோ ஒன்றை குற்றம் சாட்டுவதற்காக கூறுகிறார்கள். தமிழக முதல்வரை எடுத்த உடனே பார்த்து பேசிட முடியாது. ஏற்கனவே அவருடன் தொடர்பு இருந்திருந்தால் தான் இந்த மாதிரி முடிவு எடுத்து இருக்க முடியும் என்பது எல்லோருடைய கருத்தாக இருக்கிறது. அது குறித்து அவங்களை பற்றி நான் குறை சொல்வதற்கு இல்லை. அவர்கள் முடிவு எடுப்பதின் கீழ், முடிவு எடுத்ததற்கு ஒரு காரணத்தை சொல்கிறார்.

குறை சொல்லமாட்டேன்!




ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் தான் அவரை தொடர்பு கொண்டேன். முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கு முதல் நாள் நான் அவரை தொடர்பு கொண்டேன். இது முன்னாடி சட்டசபை நடக்கும் போது, பலமுறை அழைத்து இருக்கிறேன். எனது உதவியாளர் நான் கூறி பலமுறை அழைத்து இருக்கிறார்கள். அவர் ஒரு குறையாக சொல்லி இருக்கிறார். நான் அவரை பற்றி குறை சொல்லமாட்டேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


குறுஞ்செய்தி காட்டிய ஓபிஎஸ்



பிரதமரை சந்திப்பது பற்றி நயினார் நாகேந்திரனுக்கு கடந்த ஜூலை 14 மற்றும் ஏப் 12 ஆகிய தேதிகளில் அனுப்பிய குறுஞ்செய்தியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிருபர்கள் சந்திப்பில் காண்பித்தார்.

Advertisement