கால்வாயில் கார் கவிழ்ந்து 11 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தின் சரயு நதியின் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.


உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள சிஹாகான் கிராமத்தில் இருந்து 15 பேர் காரில் புனித நீர் எடுத்துக் கொண்டு, கார்குபூரில் உள்ள பிருத்விநாத் கோவிலுக்கு நேற்று சென்றனர்.


பெல்வா பஹூட்டா பகுதியில் கார் சென்றபோது மழை பெய்ததால் காரை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால், கட்டுப்பாட்டை மீறி அருகேயுள்ள சரயு நதியின் கால்வாயில் கார் கவிழ்ந்தது.




நீரில் மூழ்கியதால் அதில் இருந்து வெளியேற முடியாமல் ஆறு பெண்கள், மூன்று குழந்தைகள், இரு ஆண்கள் என 11 பேர் மூச்சுத் திணறி இறந்தனர்.



இது பற்றி அறிந்து விரைந்து வந்த கிராமத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் பலியான 11 பேர் உடல்களையும் மீட்டனர். மேலும் டிரைவர் உட்பட நான்கு பேரை காயத்துடன் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பலியானவர்களில் ஒன்பது பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விபத்து பற்றி அறிந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.


விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.




பலியானோர் குடும்பத்தாருக்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

Advertisement