ஆம்பூரில் இப்ப பேமஸ் மலாய் பன்!

ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள, 'ஷபிக் ஷமில் மலாய் பன்' கடையின் உரிமையாளர் ஷபிக்: நான், 2007 முதல், ஆம்பூர் பஜாரில் டீ கடை நடத்தி வந்தேன். அப்போது முதலே, வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமாக என்ன தரலாம் என்பது தான் என் யோசனையாக இருந்தது.


ஒரு நாள் காலை டிபன் சாப்பிட கையில் போதிய பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்து பார்த்ததில், கடையில் பன்னும், பால் கோவாவும் இருந்தது.


இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு பார்த்தேன்; ருசி அருமையாக இருந்தது . அத்துடன், பாலை கொதிக்க விட்டு, அதிலிருந்து செய்யக்கூடிய மலாய் கிரீமை, பன்னுடன் வைத்து சாப்பிட்டு பார்க்கலாம் என்ற யோசனையும் தோன்றியது; செய்து சாப்பிட்டேன்.




ருசி, அருமையாக இருந்தது. அதன் பின், கடைக்கு வரும் சிலருக்கு, 'டேஸ்ட்' செய்ய கொடுத்தேன். அனைவருக்குமே அதன் ருசி பிடித்து இருந்தது. உடனே, அதை எங்களுடைய தயாரிப்புகளில் ஒன்றாக சேர்த்து விட்டோம்.



கடந்த, 15 ஆண்டு களாக மலாய் பன்னை விற்பனை செய்கிறேன். ஆனால், இப்போது தான் மற்ற கடைகளில் இது பிரபலம் அடைய துவங்கி இருக்கிறது.



காலை, 5:00 மணிக்கு கடை திறக்க வேண்டுமென்றால், அதிகாலை, 3:00 மணிக்கே மலாய் கிரீமை தயார் செய்யும் பணியை துவக்கி விட வேண்டும்.



என் கடையில் டீ, இனிப்பு மற்றும் கார வகைகளையும் விற்பனை செய்கிறேன். இத்தனையும் இருந்தாலும், கடையில் அதிகமாக விற்பனையாவது மலாய் பன் தான்.



இப்போது, இந்த மலாய் பன்னை இன்னும் சத்தாக கொடுக்க வேண்டும் என்பதற்காக, 'பீட்ரூட் பிளேவர், கேரட் பிளேவர்' சேர்த்து, தயாரித்து விற்பனை செய்கிறேன்.



இன்னும் கூடுதலாக, 10 பிளேவர்கள் இதில் கொண்டு வர உள்ளோம். எந்த பிளேவராக இருந்தாலும், 20 ரூபாய் தான் விலை.



பஜாரில் இருந்த கடையை, ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள சாலைக்கு மாற்றினோம். அதன் பின், அதிக மக்களுக்கு எங்கள் கடையும், எங்களின் மலாய் பன்னும் பிரபலமானது.



ஆரம்பத்தில், 5,000 ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய டீக்கடையாக துவக்கினேன். இன்று, ஒரு நாளைக்கு, 1,200 மலாய் பன் விற்பனை செய்கிறேன்.



இதன் வாயிலாக, மாதம், 7 லட்சம் ரூபாயும், டீக்கடையில், மாதம், 1 லட்சம் ரூபாயும், 'டேர்ன் ஓவர்' ஆகிறது. இப்படியாக மாதத்திற்கு, 8 லட்சம் ரூபாய் வரை, டேர்ன் ஓவர் செய்கிறேன்.



பிசினஸில் அடுத்து என்ன என்ற தேடலுக்கு, என்ன பதில் கிடைக்கிறது என்பதை பொறுத்து, அடுத்த கட்ட முயற்சி இருக்கும்!

Advertisement