சாதிக்கும் சந்துரு...

ஓ ட்டமும், நடையும் இவரது அடையாளம். போலீஸ்காரர், விளையாட்டு வீரர், பயிற்சியாளர் என அடையாளப்படுத்தப்படும் சந்துரு, இதுவரை பெற்ற பதக்கங்கள் 150ஐ தாண்டும். சமீபத்தில் அமெரிக்காவில் உலக காவலர், தீயணைப்போருக்கான தடகளப்போட்டியில் தமிழக போலீஸ் சார்பில் நீளம் தாண்டுதலில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார் இந்த 44 வயது 'இளைஞர்'.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...

சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை. 2003ல் போலீஸ் பணியில் சேர்ந்தேன். தற்போது மதுரை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிகிறேன். பள்ளியில் இருந்தே எனக்கு விளையாட்டு மீது ஆர்வம். போலீஸ் பணியில் சேர்ந்தது முதலே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். ஆண்டுதோறும் போலீஸ் துறை சார்பில் நடக்கும் போட்டியில் பதக்கங்களை பெற்று வருகிறேன். அதன்மூலம் ஆசிய போட்டி, உலக போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது.

முதன்முதலாக 2017ல் சீனா ஓபன் மாஸ்டர் ஆசிய போட்டியில் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றேன். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டி நடக்கும். 2019ல் நடந்த போட்டியிலும் வெள்ளி வென்றேன்.

ஆண்டுதோறும் நடக்கும் உலக காவலர் மற்றும் தீயணைப்போருக்கான தடகளப்போட்டியில் தொடர்ந்து பங்கேற்கிறேன். 2023ல் நெதர்லாந்து போட்டியில் நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றேன். 2024ல் கனடா வில் நடந்த இப்போட்டியில் நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றேன். இந்தாண்டு வேலுார் எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் 15 பேர் அமெரிக்காவில் நடந்த போட்டியில் பதக்கங்களை வென்றோம்.

டி.ஜி.பி., சங்கர்ஜிவால் முதல் மதுரை எஸ்.பி., அரவிந்த் வரை அனைத்து அதிகாரிகளும் பாராட்டினர். என்னை போல் மற்றவர்களும் சாதிக்க மதுரை மாவட்ட ஆயுதப்படையில் அதிகாரிகளின் முயற்சியால் 'ஏ.ஆர். அதெலடிக் கிளப்' ஆரம்பிக்கப்பட்டது. இதில் போலீசார், அவர்களின் பிள்ளைகள், விளையாட்டில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தினமும் காலை, மாலை இலவச பயிற்சி அளித்து வருகிறேன். இந்த கிளப்பில் பலரும் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒருபுறம் போலீஸ் பணி, மறுபுறம் விளையாட்டு, பயிற்சி என என் பணி தொடர்ந்து நடப்பதற்கு மனைவி சந்திரஜோதியும், உயர்அதிகாரிகள் தரும் ஊக்கம்தான் காரணம்'' என்கிறார் சந்துரு.

- இவரை வாழ்த்த 63821 96905

Advertisement