ஒரு நாயகன் உதயமாகிறான்...

ரசனைக்கு எப்படி மொழி முக்கியமில்லையோ அதுபோல் லட்சியத்துக்கு சரீரத்தின் அங்கம் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமில்லை. 'செவி உணர்திறன் அற்று, வாய்பேச முடியாமல் இருந்தாலும் எனக்குள் பொங்கும் கலை ஆர்வத்துடன் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அது போடும் இசைக்கு நடனம் ஆடிக்கொண்டிருக்கிறேன்' என ஆரம்பமே நம்பிக்கை உதிர பேசினார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த டேனியல் ஜெபராஜ்.
பிறவி நரம்பு மண்டல குறைபாட்டில் செவி உணர்திறன் இழந்தவர். தொடர்ந்து வாய்பேச முடியாமல் போக அவரின் குடும்பத்துக்கு கூடுதல் அதிர்ச்சி. சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. நிரந்தர தீர்வுக்கு 'இம்ப்ளான்ட் சிகிச்சை'தான் வழி என டாக்டர் கூற அதுவும் பையனின் உடல் நுாறு சதவீத ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்றார். ஆப்பரேஷனுக்கு ரூ.25 லட்சம் செலவாகும். மும்பை சென்று தங்க வேண்டியதிருக்கும் எனவும் கூறி உள்ளனர். நடப்பது நடக்கட்டும் என அன்றிருந்த இயலாமையில் குடும்பம் ஒரு அடி பின்னே எடுத்துவைத்தது.
டேனியில் ஜெபராஜே கூறுகிறார்...
மனம் தளராத பெற்றோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 'ஸ்பெஷல் சைல்டு'களுக்கான 'ஓரல் பள்ளியில்' சேர்த்து தனித்திறனை வளர்க்க உறுதுணையாக இருந்தனர். 8ம் வகுப்புவரை அங்கு பயின்றேன், பாட்டு, நாடகம், டான்ஸ் என அவார்டுகளை வாங்கி குவித்தேன். பின்னர் பெற்றோருடன் சென்னையில் குடியேறினோம். சென்னையில் காது கேளாதோருக்கான சிறப்புப்பள்ளியில் படித்தேன். பி.சி.ஏ., பட்டம் முடித்தேன். தற்போது வி.எப்.எக்ஸ்., கோர்ஸ் படிப்போடு பிரபல தனியார் சேனல் நடத்திய நடனப்போட்டியில் பங்கேற்றேன்.
அதே சேனலில் காெமடி கில்லாடிஸ் நகைச்சுவை தொடரிலும் நடித்துள்ளேன் இதில் கிடைத்த பேரும், புகழும் இனி 'சினிமா'தான் எதிர்காலம் என முடிவு செய்ய வைத்தது. குறும்படங்களில் தோன்றி, நடிப்பு ஆர்வத்தையும் தனி டிராக்கில் ஈடுபடுத்தி வந்தேன். காதுகேளாதோருக்கான போட்டிகள் எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளாமல் வீடு திரும்பியதில்லை. 2023ல் தான்சான்யாவில் நடந்த உலகளாவிய போட்டியில் நடிப்பு, நடனம் 2 பிரிவுகளில் பரிசுபெற்றிருக்கிறேன்.
சென்னையில் தேசிய போட்டியில் பரிசும், கேமரா எனும் குறும்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான பரிசும் பெற்றேன். 2024ல் தெலுங்கானா, புனே போட்டிகளிலும், 2025 பிப்ரவரியில் பஞ்சாப் போட்டியில் 'புல்வாமா தாக்குதல்' குறித்து ஆவணப்படம் தயாரித்து பாராட்டு பெற்றது மகிழ்வான தருணம். இன்று எனது குறையை சரிசெய்ய சென்னையிலே நவீன மருத்துவங்கள் வந்துவிட்டன. ஆனால் எனது அமைதிக்குள் ஒலிக்கும் இசைக்கும், இயல்புக்கும் வெளியிருந்து எந்த சத்தங்களும் வேண்டாம். இப்படி இருப்பதுதான் நான் செய்ய நினைக்கும் காரியங்களில் என்னை முழுமையாக ஈடுபடவைக்கிறது. சினிமாவில் என்னைப் போன்றவர்கள் சாதித்ததை பார்க்கையில் உந்துதல் கிடைக்கிறது. சின்ன, சின்ன டான்ஸ் வீடியோக்கள், குறும்படங்கள் மூலம் எனக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறேன்.
தமிழில் லியோ, சந்திரமுகி 2, மலையாளத்தில் மோகன்லால் இயக்கி நடித்த பாரோஸ் படங்களில் குழுவினரோடு வி.எப்.எக்ஸ்., பணி செய்திருக்கிறேன். எனக்கான வழித்தடத்தை உருவாக்கி வருகிறேன். தகுதி உள்ளவருக்கு பிரபஞ்சம் வழிவிடும். நமக்கான மேடை வரும். நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும்
-
இலுப்பூரில் வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
-
திருத்தணி கோவில் மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு திடீர் தடையால் அதிருப்தி
-
கால்வாயில் கார் கவிழ்ந்து 11 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
-
வேளச்சேரியில் இடமிருந்தும் பஸ் நிலையம் அமைப்பதில்... அலட்சியம்: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொகுதிமக்கள் அதிருப்தி
-
ஆம்பூரில் இப்ப பேமஸ் மலாய் பன்!
-
காசிமேடில் விற்பனைக்கு வந்த 500 கிலோ ராட்சத சுறா மீன்