மத்திய அரசின் நிதி சார் திட்ட முகாம்கள் 30 நாளில் 5.33 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை ;மத்திய அரசின் நிதி சார் திட்டங்கள் சிறப்பு முகாம்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் ஜூலை மாதத்தில் 5.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயா கூறியதாவது:

அரசின் நிதிசார் திட்டங்கள் குறித்த சிறப்பு முகாம்கள் கடந்த ஜூலை மாதம் துவங்கியது. தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில், இந்த சிறப்பு முகாம்கள் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டும் என்பதே இந்த முகாம்களின் நோக்கம்.

சிறப்பு முகாம்களில், பிரதமரின் ஜன் தன் திட்டம், ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக் ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா ஆகிய திட்டங்களின் பயனாளிகளுக்கு குறைகள் இருந்தால், அவற்றுக்கு தீர்வு காணப்படும். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வங்கி கணக்குகள், பிரதமரின் ஜன்தன் யோஜனா கணக்குகள், செயல்படாத வங்கி கணக்குகளையும் முகாம் வாயிலாகப் புதுப்பிக்க முடியும்.

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முழுதும் அனைத்து வங்கிகளும் ஒருங்கிணந்து 5,230 முகாம்களை மாநிலம் முழுதும் நடத்தியுள்ளன.

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் சேர 1.60 லட்சம் புது விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 85,507 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் 1.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இவற்றில் 1.10 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் 114 பேர், சுரக் ஷா பீமா யோஜனா திட்டத்தில் 68 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து நடந்து வரும் முகாமில் கலந்து கொண்டு மக்கள் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

*மத்திய அரசின் திட்டங்களை அறியலாம் *பயனாளிகளின் குறைகள் தீர்க்கப்படும் *செயல்படாத கணக்குகளை புதுப்பிக்கலாம் * முகாம் செப்டம்பர் வரை நடைபெறும்

Advertisement