தி.மு.க., ஆட்சியில் தேச பாதுகாவலர்கள் கெஞ்சும் நிலைமை: பா.ஜ.,

சென்னை: 'குற்றவாளிகள் சுதந்திரமாக திரியும் தி.மு.க., ஆட்சியில், தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக கெஞ்சுகின்றனர்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி நாராணயபுரத்தைச் சேர்ந்த கலாவதி, சி.ஆர்.பி.எப்., வீரராக ஜம்மு - காஷ்மீரில் பணிபுரிகிறார். இவர் வீட்டில் ஜூன் 24ல், மர்ம நபர்கள் புகுந்து, 22.50 சவரன் நகை, 50,000 ரூபாயை திருடிச் சென்றனர். கலாவதி குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, கலாவதி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, அண்ணாமலை அறிக்கை:

ஜம்மு - காஷ்மீரில், நம் நாட்டின் எல்லையில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்., ஜவான், தன் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில், போலீசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சீருடையில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியை, ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு நிர்வாகம் உள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரியும் தி.மு.க., ஆட்சியில், தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக கெஞ்சுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் எழுந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement