பீஹாரிகளுக்கு எதிரான பேச்சால் பிரச்னை 'இண்டி' கூட்டணி கலக்கம்; தி.மு.க., புது திட்டம்

சென்னை: 'தமிழக வாக்காளர் பட்டியலில், பீஹாரிகளை சேர்ப்பது தி.மு.க., கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். இதை உணராமல், பீஹாரிகளுக்கு எதிராக தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பேசுவது, பீஹார் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணியை தோற்கடித்து விடும்' என்று, ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி அச்சம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பீஹாரில், 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் வேலைக்காக, வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதும், தமிழகத்தில் உள்ள 6.5 லட்சம் பீஹாரிகளை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடப்பதாக, காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர் பிரச்னையை கிளப்பியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், 'தமிழக வாக்காளர் பட்டியலில் பீஹாரிகளை சேர்ப்பது ஆபத்தானது; சட்ட விரோதமானது. விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் தலையிடும் செயல். தேசத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முறையையும் மாற்ற, தேர்தல் கமிஷன் முயற்சிக்கிறது' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

வி.சி., தலைவர் திருமாவளவன், 'தமிழகத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த 70 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்; அவர்களையும் வாக்காளர்களாக சேர்க்க திட்டமிடுகின்றனர். இது குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், தமிழகத்தில் பீஹாரிகளை வாக்காளர்களாக சேர்க்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இப்படி பீஹாரிகளுக்கு எதிராக, தமிழகத்தில் உள்ள 'இண்டி' கூட்டணி கட்சியின் தலைவர்கள் கொந்தளித்திருப்பது, பீஹாரில் உள்ள ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

'பீஹாரிகளுக்கு ஓட்டுரிமை கூடாது என பேசும் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாக பா.ஜ., பிரசாரம் செய்ய, தி.மு.க., கூட்டணி வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. இது எங்களுக்கு தோல்வியை தந்து விடும்' என, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியான ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் அச்சம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி.,க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் தேஜஸ்வி பேசியிருக்கிறார்.

அப்போது, அவர் கூறியுள்ளதாவது:

பீஹாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், முஸ்லிம், யாதவ் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பா.ஜ.,வின் ஓட்டு வங்கி அல்ல. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலே பா.ஜ.,வினர் என நினைப்பது தவறு.

தமிழகத்தில் பீஹார் தொழிலாளர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டால், அது தி.மு.க., கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். எனவே, பீஹாரிகளுக்கு எதிராக பேச வேண்டாம். அப்படி பேசினால், வரும் பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகமாகி விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

அதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பீஹார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement